பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பேரணிப் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.  

குறிப்பாக “‘பிஎஸ்ரிஏ’ சட்டமூலம் வேண்டாம்...!" என்ற பிரதான பதாகையுடன் திரண்ட போராட்டக்காரர்கள், "நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்!" என்ற வாசகம் அடங்கிய அட்டைகளை அதிகளவில் ஏந்தியிருந்தனர்.  

அத்துடன் "அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்!", "சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாக பயமுறுத்தக் கூடாது!", "கேட்பது ஜனநாயகம்; தருவது அடக்குமுறை" போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசு உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர். 

இப்போராட்டத்தின்போது வெளியிடப்பட்ட அறிக்கையில், “பிஎஸ்ரிஏ”’ சட்டமூலமானது மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை முடக்கும் நோக்கில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

பொலிஸ் அதிகாரி, இராணுவம், கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்கள் கூட்டம் கூடுவதையும் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும் தடுக்கவும், கைது செய்யவும் வழிவகை செய்யப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.  

குறிப்பாக, இச்சட்டமூலத்தின் சரத்து 19 மற்றும் 20இன் படி, பொலிஸாருக்கு இருப்பது போல இராணுவம் மற்றும் கடலோரக் காவல்படைக்கும் சந்தேக நபர்களைக் கைது செய்யும், வீடுகளுக்குச் சென்று சோதனையிடும், பிடியாணை இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படுகின்றது. 

மேலும், சரத்து 26இன்படி கைது செய்யப்பட்டவரை 48 மணித்தியாலங்களில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வழிசெய்வது அரசியலமைப்பின் 13.2 உறுப்புரை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு எதிரானதாகும் என்றும், சரத்து 27இன்படி சந்தேக நபரை இரண்டு வருடங்களுக்குத் தடுத்துவைத்து விசாரிக்க அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், சரத்து 51இன்படி பொலிஸ் அதிகாரி ஆபத்து நிகழும் என கருதினால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதையோ அல்லது ஊர்வலம் செல்வதையோ தடுக்க முடியும் என்றும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.   

கட்டமைப்பு மாற்றம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான வாழ்வு என உறுதியளித்து, 159 ஆசனங்களுடன் மக்கள் அதிபெரும்பான்மை ஆணையைக் கொடுத்துள்ள நிலையில், கொண்டுவரவுள்ள இச்சட்டத்தால் பொதுமக்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைக் குரல்கள் நசுக்கப்படப் போகின்றன எனச் சுட்டிக்காட்டி, குறித்த சட்டமூலத்தை உடனடியாகக் கைவிடுமாறு தேசிய மக்கள் சக்தி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் ஆகியவற்றுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.