பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பதோடு இது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விடவும் மிகவும் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலமானது, நாட்டின் அரசியலமைப்பின் கீழ் பேணப்படும் ஜனநாயக நெறிமுறைகள், மதிப்புகளை மீறும் வகையிலான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. 

அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளையும் அடிப்படை உரிமைகளையும் இந்தச் சட்டம் பலவீனப்படுத்தக்கூடியவாறே உள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில், பயங்கரவாதத்தைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளிலிருந்து அரப்பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற விதிகளைத் தவிர, ஏற்றுக்கொள்ளத்தக்க வேறு கொள்கைகள் எதுவும் இல்லை.  பயங்கரவாத தடைச்சட்டத்தின் உள்ளடக்கம் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளுக்கு முரணானவை என்பதால், அது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக நாங்கள் போராடிய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியும் அதனை ஏற்றுக்கொண்டது. தற்போது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழியப்பட்ட முந்தைய சட்டமூலத்திற்குச் சமமான வகையில் பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை தயாரித்து அதனை நிறைவேற்ற முயல்வது மிகவும் வருந்தத்தக்கது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலீடாக கொண்டுவரப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். சட்ட நடவடிக்கை மூலம் இத்தகைய சட்டமூலங்களை எதிர்த்த தற்போதைய அரசாங்கம், இப்போது அதேபோன்ற சட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்த முயற்சிக்கின்றது.

இத்தகைய நகர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது. முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தினை உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.