பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசாங்கம் தவறாக பயன்படுத்தவில்லை. இனியும் பயன்படுத்த போவதில்லை. வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விரோதமானதாக அமையாது என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (29) வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படபோவதில்லை. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக சட்டமியற்ற போவதுமில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்படவில்லை. இனிவரும் காலங்களிலும் அவ்வாறு செயற்பட போவதில்லை.

கடந்த கால அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை அரசியல் பழிவாங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டது. அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பலர் கைது செய்யப்பட்டார்கள்.ஆனால் தற்போது அவ்வாறான நிலைமை கிடையாது. பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் போது அவர்கள் தான் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.

பாதாளக்குழுக்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களை இல்லாதொழிக்க வேண்டுமாயின் அதற்கென பிரத்தியேக சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.அதற்கமைவாகவே ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.இது சாதாரன மக்களுக்கு எதிரானதாக அமையாது என்றார்.