அடையாறு பகுதியில் சமீபத்தில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், எச்5என்1 எனப்படும் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதியானது.
இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமை செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, தமிழக சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பறவை காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவக்கூடும்.
பாதிக்கப்பட்ட பறவையிடம் இருந்தோ, மனிதரிடம் இருந்தோ மற்றவர்களுக்கு, `வெஸ்ட் நைல் வைரஸ்' பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அதனால், காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுமாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், சென்னையை தொடர்ந்து, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் காகங்கள் உயிரிழந்தன. கிண்டி உயிரியல் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததால், பூங்கா மூடப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ``தமிழகத்தில் பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. காகங்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இறந்த பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக்கூடாது. அறிகுறிகள் இருந்தால், அலட்சியமாக இல்லாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். பறவை காய்ச்சலால் கோழிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
கோழி இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்” என்றனர்.
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space