வட மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலட்சியப் பாடல் ஒன்றைப் பாடியமைக்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பவத்தை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
சந்திவெளி எக்கோ விளையாட்டுக் கழகத்திற்கு கடினப் பந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தற்போது அமைச்சர்களாகவும் உயர்மட்டப் பொறுப்புகளில் உள்ளவர்களாகவும் இருக்கும் பலர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உட்பட, கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி எங்களுடன் இணைந்து கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இன்று அதே சட்டம் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.
மேலும், ஒரு பாடலுக்காக ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் புலிக்கொடி புலிகளுடன் தொடர்புடைய சின்னங்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், குறித்த பாடலில் அவ்வாறான எந்தவொரு உள்ளடக்கமும் காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
இது வெறுமனே ஒரு எழுச்சிப் பாடல் மட்டுமே. அதனை அடிப்படையாகக் கொண்டு இளைஞர் ஒருவரைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது மிகவும் மோசமான மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில், இவ்வாறான சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். சுதாகரன், உப தவிசாளர் கு. பத்மநீதன், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடல் பாடிய இளைஞரை பயங்கரவாதி என கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space