நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதனை ஆதரிப்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வியாழக்கிழமை (16) உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தற்செயலாக நடந்தவை அல்ல, நாட்டில் திட்டமிட்ட முறையில் பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்த போது, அவர்கள் வீதிகளில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி தப்பிக்கப் பார்த்தனர்.
எனினும், தற்போது வீதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்தத் துப்பாக்கிப் பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக் குழுவினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியில் இவ்வாறான செயற்பாடுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தற்போது இந்த பாதாள உலகக் குழுவினர் சிறைச்சாலைகளுக்குள் தங்களது திட்டங்களை நடத்தும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். சிறைச்சாலைகளுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தி, புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்தால், அது கனவிலும் நடக்காத காரியம் ஆகும்.
நாட்டில் இவ்வாறானதொரு தீவிரமான பாதுகாப்புச் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் மத்தியில் வேறு விதமான கருத்துக்களைக் கூறி கேலிச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும், ஏதாவது ஒரு ஊடக அலைவரிசையில் பேச வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலையிலும் உள்ளார். அதுமட்டுமன்றி இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும், ஜனாதிபதி வீட்டிற்குப் போக வேண்டும், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் ஆணையை இந்த நாட்டு மக்கள் தங்களுக்கு வழங்கியிருப்பதுடன், பொதுமக்கள் எப்போது இனி நீங்கள் செய்தது போதும் என்று சொல்கிறார்களோ, அன்றுதான் தாங்கள் வீட்டிற்குப் போவோம். அதைவிடுத்து, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய போதைப்பொருள் வலை அமைப்புகள் சிக்கிக்கொள்ளும் போதும், பாதாள உலகக் குழுவினரிடம் இருந்து இலஞ்சம் வாங்கியது மற்றும் கொலைகள் குறித்து அனைத்தும் வெளிவரும் சந்தர்ப்பத்திலும், தங்களது திருட்டை மறைப்பதற்காக அரசாங்கத்தை வீட்டுக்குப் போகச் சொன்னால், அதற்கு ஒருபோதும் தாங்கள் தயாராக இல்லை என்றார்.
பாதாள உலகக் குழுவினர் சிறைச்சாலைச் சதித்திட்டங்கள் ஒருபோதும்பலிக்காது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space