ஒரு நாட்டின் சுபீட்சம் என்பது அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டத்தின் ஆட்சி எந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல தசாப்தகாலமாகத் தொடரும் நிச்சயமற்ற தன்மையின் ஊடாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்குப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் உரிமையை அழித்துவிடமுடியாது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க்- ஆன்ரே பிரான்ஞ் தெரிவித்துள்ளார்.
இவ்வாரத் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க்- ஆன்ரே பிரான்ஞ், அங்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்திவருகிறார்.
அதற்கமைய செவ்வாய்க்கிழமை (24) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்து அவர்களது கரிசனைகளைக் கேட்டறிந்த வதிவிடப்பிரதிநிதி, இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'ஒரு நாட்டின் சுபீட்சம் என்பது அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டத்தின் ஆட்சி எந்தளவுக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல தசாப்தகாலமாகத் தொடரும் நிச்சயமற்ற தன்மையின் ஊடாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதற்குப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் உரிமையை அழித்துவிடமுடியாது' எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் நிலவும் தாமதம் காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் ஆட்சியியல் நிர்வாகக் கட்டமைப்பில் நிலவும் இடைவெளி பற்றி சிறிதரன் எடுத்துரைத்ததாக வதிவிடப்பிரதிநிதி மார்க் -ஆன்ரே பிரான்ஞ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பொதுவான சவால்களை எதிர்கொண்டு மீள்வதற்கான கூட்டிணைந்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வட மாகாணப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தல் என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான சட்ட ஆட்சியை பலப்படுத்துவதிலேயே நாட்டின் சுபீட்சம் தங்கியுள்ளது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space