பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற தமிழியல் இளங்கலைமாணித் தேர்வினை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும்!
vidiyel 19 பங்குனி 2026 · 15:36 20 views
Ad Space
Ad Space
தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்புத் தேர்வை நிறைவு செய்தோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு, 15.03.26 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் (Noisiel) நுவாசியல் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கற்கை நெறியை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர்ப் பல்கலைக்கழகத்துடனும் தமிழ் இணையக்கல்விக்கழகத்துடனும் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை 31 மாணவர்கள் இப்பட்டக்கல்வியை நிறைவு செய்திருந்தனர். இவர்களுள் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளில் வளர்தமிழ் 12 நிறைவு செய்த 25 மாணவர்களும் அடங்குவர்.
தொடக்க நிகழ்வாக, தமிழியல் பட்டப்படிப்பினை மேற்கொண்டுவரும் மாணவர்கள், கற்கையை நிறைவு செய்த மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றலும் அகவணக்கமும் நடைபெற்று, தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தியுடன் நிற்கப் ‘பசுமை நிறைந்த நினைவுகளே ...’ என்னும் பிரியாவிடைப் பாடல் ஒலிக்கப்பட்டு அனைவராலும் பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாணவர்களும் அவர்களின் பெற்றோருடன் நிற்க கவியுரைத்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். தனித்தனியாக மாணவர்களுக்காக எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து நூலாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன என்பதும் சிறப்பிற்குரியதாகும். மாணவர்களும் தங்களுடைய பட்டக்கல்வியின் பட்டறிவுகளை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.
சிறப்பு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவூட்டும் 'ஓரங்க நாடகம்' தனி நடிப்பாக நடைபெற்றது. அரங்கில் பலரும் கண்ணீருடன் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்தவாறு இந்நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த ஓரங்க நடிப்பை தாயகக் கலைஞரான திருமிகு வே. கெங்கேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்ச்சித் தொகுப்பு , கவியுரைப்பு, மாணவர்கள் பெற்றோர்களை ஒருங்கிணைத்தல் என அனைத்தையும் பொறுப்புடன் தமிழியல் இளங்கலைமாணி பட்டகர்களாகிய எமது இளந்தலைமுறையினர் மேற்கொண்டிருந்தைக் காணக்கூடியதாக இருந்தது.
நிறைவாக குழு ஒளிப்படம் எடுத்து நன்றி உரையுடன் 7.30 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.