பிரான்ஸ் நாட்டில் சமீப நாட்களாக மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு, பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில்,  நேற்று (19) மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை (20) இரவு வேளைகளில் பகுதி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

 இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் பிரதமர் செபஸ்டியன் லெகோர்னுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்நாட்டின் வடக்கில் உள்ள லில் உட்பட நான்கு நகரங்களில் நேற்று மற்றும் இன்றிரவு 8 மணி முதல் மறுநாள் புதன்கிழமை (21) காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு, நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறைகள் இடம்பெற்றதோடு, பல கடைகளில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த கலவர நிலைமையில் பொலிஸார் சுமார் 1800 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் 

கடந்த மாதம் பிரான்ஸில் மாணவர்கள் தமது கல்வித் தேவைகளை அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 

அந்தப் போராட்டத்துக்கு அந்நாட்டில் இயங்கி வரும் இடதுசாரி கட்சிகள், அக்கட்சிகளின் ஆதரவாளர்கள், ஏனைய சில அமைப்பினர், பொதுமக்கள் என பல தரப்பினரும் ஆதரவளித்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றனர். 

அந்த மாணவர்களின் போராட்டங்கள் தற்போது விலை அதிகரிப்புக்கு எதிராக பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களாக மாறியிருக்கின்றன. தற்போது இந்த போராட்டங்களில் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தோரும் பிரான்ஸில் வசித்து வரும் சட்டவிரோத அகதிகளும் கூட கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும்  இப்போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியிருக்கிறது. 

கடந்த சனிக்கிழமை (17) பிரான்ஸ் வடக்கின் பல நகரங்களில் இனந்தெரியாத சில நபர்கள் பல கட்டடங்களுக்கு தீ வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

போராட்டங்களில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் வணிக வளாகங்கள், உணவகங்கள், வியாபார நிறுவன அலுவலங்களை தாக்கியுள்ளதாகவும் வன்முறையாளர்கள் பெரும் எண்ணிக்கையிலான தனியார் - பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் பல கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. 

நேற்றும் இன்றும் இரவு வேளைகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வன்முறைச் சம்பவங்கள் குறித்து கண்காணித்து வருவதாகவும் அரசு தரப்பில் குறிப்பிடப்படுகிறது.