பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவரது இடத்துக்கான போட்டியில் பலவேறு கட்சிகளைச் சேர்ந்த பலரது பெயர்கள் அடிபடுகின்றன.
அவர்களில், தீவிர இடதுசாரிக் கட்சி வேட்பாளரான Jean-Luc Mélenchonம் ஒருவர்.
சனிக்கிழமையன்று, பாரீஸ் அருகே பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய Mélenchon, உக்ரைன் தொடர்பில் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பிராந்திய எல்லைகளை விட்டுக் கொடுப்பது குறித்துப் பேசிய Mélenchon, அங்குள்ள மக்களின் அனுமதியின்றி உக்ரைனில் பிராந்திய எல்லைகளை விட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்துவதை நாம் ஏற்க முடியாது என்று கூறினார்.
எல்லையின் எந்தப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை, அந்தந்த பகுதி மக்களே வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், Mélenchonஇன் கருத்துக்கு பிரான்ஸின் வெளியுறவு அமைச்சரான Jean-Noel Barrot கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Mélenchon, ரஷ்ய அதிபர் புடினின் செய்தித் தொடர்பாளர் போலப் பேசுகிறார் என்றும், இந்த பேச்சு அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கே தகுதியற்றவராக்குகிறது என்றும் விமர்சித்துள்ளார் Barrot.
அதேபோல, இடதுசாரி கூட்டணியில் இருக்கும் Mélenchonஇன் முக்கிய அரசியல் போட்டியாளரான Raphael Glucksmann என்பவரும், ரஷ்யா ஏற்கனவே உக்ரைன் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ள நிலையில், அங்கு வாக்கெடுப்பு நடத்தக் கோருவது ரஷ்யாவின் பிரச்சாரத்தை அப்படியே எதிரொலிப்பது போன்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.