புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதோ அல்லது சிறைச்சாலைகளை நிரப்புவதோ அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளமாகும்.கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சிறந்த முறையில் சமூகமயப்படுத்த வேண்டும். அதற்கான அனுபவம் எமக்கு உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கேகாலை பகுதியில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்களை சமூக ஊடகங்களை பார்த்தே குறிப்பிட வேண்டும் என்று நீதியமைச்சர் குறிப்பிடும் நிலைக்கு நிர்வாக கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது.
சிறைச்சாலை நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் வினைத்திறனான வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதும், சிறைச்சாலைகளை நிரப்புவதும் அரசாங்கத்தின் வெற்றியல்ல, அது சமூக சீர்கேட்டின் அடையாளம்.
சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 85 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டவர்கள். ஆகவே இவர்களுக்கு முறையாக புனர்வாழ்வளிக்க வேண்டும்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தவுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் 12 ஆயிரம் போராளிகளுக்கு முறையான புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சிறந்த முறையில் சமூகமயப்படுத்தப்பட்டார்கள். ஆகவே அதேபோன்று போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கும் புனர்வாழ்வளிக்க வேண்டும். அது தொடர்பான அனுபவம் எமக்குள்ளது என்றார்.
புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது அரசாங்கத்தின் வெற்றியல்ல அது சமூக சீர்கேட்டின் அடையாளம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space