புத்தளம் நகர வானப்பரப்பில் நேற்று (01) திங்கட்கிழமை அதிகாலை வேளையில் தீப்பிழம்புகளுடன் அதிவேகமாகப் பறந்து சென்ற விசித்திரமான விண்கல வடிவிலான பொருள் ஒன்று அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வானில் தோன்றிய இந்த அரிய காட்சியைத் தங்களது கண்களால் நேரில் காண்பதற்காக மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்ததுடன், அவர்களில் சிலர் அந்த விசித்திரப் பொருளைத் தங்களது கைபேசிகளில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் விவரிக்கும் போது,
வானில் பறந்த அந்த மர்மப் பொருள் பல அடி நீளமுடையதாகக் காணப்பட்டதுடன், ஒரு ரொக்கெட் அல்லது ஏவுகணையின் பின்புறத்தைப் போல நெருப்பு வாலுடன் காட்சியளித்துள்ளது.
சாதாரண விமானங்களை விடவும் மிக அதிவேகமாக, தரையிலிருந்து சுமார் 300 அடி உயரத்தில் பறந்த அந்தப் பொருள், இறுதியாகப் புத்தளம் களப்பு வானப் பகுதிக்கு மேல் நகர்ந்து, வெறும் கண்களுக்குப் புலப்படாதவாறு தூரத்து வானில் மறைந்துபோயுள்ளது.
இந்தத் திடீர் நிகழ்வினால் ஏதேனும் ஆபத்துகள் நேரலாம் என அச்சமடைந்த சிலர், தங்களது வீடுகளை விட்டு ஓடிப் பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டனர். இந்த மர்மமான நிகழ்வு குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வரும் போதிலும், அதற்கான முறையான ஆதாரங்கள் எவையும் இல்லை. எனவே, இது குறித்துப் பொறுப்பான அதிகாரிகள் தங்களுக்கு முறையான விளக்கமளிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த விசித்திர நிகழ்வு குறித்துக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும், நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் மையத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜயரத்ன,
"வானில் பறந்த அந்தப் பொருள் ஒரு விண்கல்லாக இருப்பதற்கே அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. பொதுவாக எரியும் நெருப்பு வாலுடன் ஒரு பொருள் தென்படுமாயின் அது விண்கல்லாகவே இருக்க முடியும். விண்கற்கள் என்பன ஆண்டின் எந்தவொரு காலப்பகுதியிலும் இரவு அல்லது அதிகாலை வேளையில் வானில் தென்படக்கூடிய சாதாரண ஒரு நிகழ்வாகும். எனவே, புத்தளத்தில் தென்பட்டதும் ஒரு விண்கல்லாகவே இருக்கக்கூடும். எவ்வாறாயினும், இது குறித்து ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன்னர் இன்னும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
புத்தளம் வானில் விண்கல்?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space