அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள டல்லாஹாசி பகுதியில், புளோரிடா ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே நேற்று சனிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 11 பேர் துப்பாக்கிக் காயங்களுக்கும், ஒருவர் வேறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
புளோரிடா ஏ அண்ட் எம் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் உள்ள பெரி வீதியில் இரவு 8.00 மணிக்கு முன்னதாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 12 பேரில் 06 பேர் பெரியவர்கள் மற்றும் 06 பேர் சிறுவர்கள் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களில் 11 வயதுடைய சிறுவன் ஒருவனும் அடங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன், ஏனைய 9 பேர் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என டல்லாஹாசி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோம் கமிங் விருந்தொன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் இரு அல்லது மூன்று நபர்களுக்கு இடையேயான தகராறு கைக்கலப்பாக மாறி, பின்னர் துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
"காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்கியுள்ளனர் என்பதை அறிவது மிகவும் இதயத்தை நொறுக்கும் விடயமாகும்," என வேதனை தெரிவித்துள்ளார்.
"எங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் முதன்மை முன்னுரிமை அளிக்கிறோம்," என புளோரிடா ஏ அண்ட் எம் பல்கலைக்கழகம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
டல்லாஹாசி பொலிஸின் வன்முறைச் குற்றப் பிரிவு அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.