பெண்களின் உடலமைப்பு, உடல் அங்கங்கள் மற்றும் வெளித்தோற்றம் தொடர்பில் பொது மேடைகளில் தெரிவிக்கப்படும் பாலியல் தன்மையிலான கருத்துகள் வெறுமனே அசௌகரியத்தை ஏற்படுத்தும் பேச்சுகளாக மட்டும் கருதப்பட முடியாது. மாறாக, அவை பெண்களைத் தாழ்த்தி ஆணாதிக்க அதிகாரத்தை நிலைநாட்டும் உத்தியாகவும் அமைகின்றன என சம உரிமை இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியசாலைகளில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் உடலமைப்பு மற்றும் தோற்றம் குறித்து அமைச்சர் லால் காந்த கருத்து தெரிவித்தாகவும் அவ் இயக்கம் கடுமையாகச் சாடியுள்ளது.
கேசரிக்கு ஞாயிற்றுக்கிழமை (01) கருத்து தெரிவிக்கும் போதே சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் வீரசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;
வைத்தியசாலைகளில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் உடலமைப்பு, உடல் அங்கங்கள் மற்றும் வெளித்தோற்றம் தொடர்பில் முன்னர் அமைச்சர் லால் காந்த பொது மேடையில் தெரிவித்த கருத்துகள் தற்போது சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. பெண்களின் உடலைப் பாலியல் நோக்கில் அணுகும் இத்தகைய கருத்துகள், அவர்களின் தன்மானத்தையும் தொழில்முறை அடையாளத்தையும் அவமதிப்பதுடன், பாலியல் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றன.
இத்தகைய பேச்சுகள் வெறுமனே பாலியல் விருப்பத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படக் கூடாது. சமூக, உளவியல், மொழியியல் மற்றும் பாலின ஆய்வுகளின் அடிப்படையில் நோக்கும்போது, பெண்கள் மீதான பாலியல் தன்மையிலான வாய்மொழித் துன்புறுத்தல்கள் ஆண்களின் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்டும் செயற்பாடுகளாகவே அமைகின்றன.
முதலாவதாக, பொது இடங்களில் ஆண்களின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சியாக இத்தகைய கருத்துகள் அமைகின்றன. வரலாற்று ரீதியாகப் பொது வெளிகள் ஆண்களுக்குரியவையாகவும், தனிப்பட்ட வெளிகள் பெண்களுக்குரியவையாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்களின் உடலமைப்பு குறித்து வெளிப்படையாகக் கருத்துரைப்பதன் மூலம், அவர்களின் நடமாட்டம் மற்றும் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை ஆண்கள் நிலைநாட்ட முற்படுகின்றனர்.
இரண்டாவதாக, பெண்களைத் தனித்துவமும் ஆளுமையும் கொண்ட மனிதர்களாகப் பார்க்காமல், அவர்களின் உடல் மற்றும் பாலியல் பண்புகளுக்குள் மட்டுப்படுத்தும் பொருளாக்கச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது. அமைச்சர் லால் காந்தவின் கருத்துகளும் இந்தப் பின்னணியில் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. ஒரு பெண்ணின் உடலமைப்பு, உடை அல்லது அங்கங்கள் குறித்து மதிப்பீடு செய்யும் உரிமை தனக்கு இருப்பதாக ஓர் ஆண் கருதுவது, பெண்களின் தனிப்பட்ட உரிமையையும் கண்ணியத்தையும் மறுக்கும் மனப்பாங்கின் வெளிப்பாடாகும்.
மூன்றாவதாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உடல் வலிமை மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகள் காரணமாகப் பெண்கள் இத்தகைய சூழல்களில் அச்சத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். எதிர்வினையாற்றினால் மேலதிகத் துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற அச்சமும், மௌனமாக இருந்தால் அதனைச் சம்மதமாகக் கருதிவிடுவார்களோ என்ற தயக்கமும் அவர்களைச் சூழ்கின்றன.
நான்காவதாக, இத்தகைய பாலியல் தன்மையிலான பேச்சுகள் ஏனைய ஆண்கள் முன்னிலையில் தமது ஆணாதிக்க மனப்பாங்கையும் மேலாதிக்கத்தையும் வெளிப்படுத்தும் செயற்பாடாகவும் அமைகின்றன. 'நாம் ஆண்கள் அல்லவா? எமது சிந்தனையும் நடத்தையும் அப்படித்தான் இருக்கும்' என்ற மனநிலையின் ஊடாகத் துன்புறுத்தல்கள் இயல்பானவையாகக் காட்டப்படுகின்றன. இதனால், அவற்றைத் தட்டிக்கேட்க வேண்டியவர்களும் மௌனமாக இருந்து அந்தச் செயற்பாடுகளுக்கு மறைமுக ஆதரவு வழங்குகின்றனர்.
ஐந்தாவதாக, பெண்கள் எவ்வாறு உடையணிய வேண்டும், எங்கு செல்ல வேண்டும், எப்போது தனியாக நடமாட வேண்டும் என்பவற்றைத் தீர்மானிக்க முற்படும் ஆணாதிக்கச் சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடாகவும் இத்தகைய கருத்துகள் அமைகின்றன. ஆண்களின் ஆதிக்கம் நிலவும் இடங்களுக்குப் பெண்கள் வரும்போது அவர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி, அவர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடாக இது அமைகிறது.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான பொறுப்பு பெரும்பாலும் பெண்கள் மீதே சுமத்தப்படுகிறது. ஆனால், அந்தப் பொறுப்பு ஆண்களிடமும் ஒட்டுமொத்தச் சமூகத்திடமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமது சக ஆண்கள் இத்தகைய கருத்துகளைத் தெரிவிக்கும்போது அதனைத் தட்டிக்கேட்பதும், தவறான நடத்தையைச் சுட்டிக்காட்டுவதும், பெண்களை அவமதிக்கும் சமூக மனப்பாங்கை மாற்றுவதும் ஆண்களின் பொறுப்பாகும்.
எனவே, அமைச்சர் லால் காந்த போன்ற பொறுப்புமிக்க பதவிகளில் இருப்பவர்கள் பெண்களின் கண்ணியத்தையும் சமத்துவ உரிமையையும் மதிக்கும் வகையில் தமது கருத்துகளையும் நடத்தைகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும். பெண்களின் உடலமைப்பைக் கேலிக்கும் பாலியல் மதிப்பீட்டுக்கும் உட்படுத்தும் பேச்சுகள் சமூகத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்பதையும் உணர வேண்டும் என்றார்.