போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுக்கமாக முன்னெடுத்ததன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் 224 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் 4,056 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

600,000 போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 596,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு வெளிநாடுகளுக்குத் தப்பியோடியுள்ள 100க்கும் மேற்பட்ட தேடப்படும் குற்றவாளிகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அதிபருமான எப்.யூ. வூட்லர் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் இறுக்கமான முன்னெடுக்கப்பட்ட இக்காலப்பகுதியில், 597,964 போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 596,591 சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அத்துடன் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளாகக் அடையாளம் காணப்பட்ட 68 நபர்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளதோடு மேலும் 112 சந்தேகநபர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டிலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, 13 நாடுகளில் வசிக்கும் சந்தேக நபர்கள் தொடர்பில் இன்டர்போல் பொலிருக்கு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன. ஏற்கனவே நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இரு வருடங்களில் 224 பில்லியன் ரூபா பெறுமதியான மொத்தம் 43,726 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பீடி இலைகள் 4,009 கிலோகிராம், ஹெரோயின், 6,526 கிலோகிராம், கிரிஸ்டல் மற்றும் ஐஸ் 28,441 கிலோகிராம் ஆகியவை அடங்குகின்றன.

இதேநேரம், கடந்த இரண்டு ஆண்டுகளில் துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகள் உட்பட 4,056 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ள. மீட்கப்பட்ட ஆயுதங்களில் 97 ரி-56 ரக துப்பாக்கிகள், ஒரு ஏ.கே-47 துப்பாக்கி, 143 கைத்துப்பாக்கிகள், 105 ரிவோல்வர்கள், உள்ளட்டங்குகின்றன என்றார்.