கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய, இதுவரை 20 தொன்களுக்கும் அதிகமான பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் கடந்த ஆண்டில் 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று புதன்கிழமை (4) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திய நச்சுப் போதைப்பொருள் சமூகமயமாவதைத் தடுத்து, எமது எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக, நீண்டகாலமாகச் சமூகத்தில் நிலைகொண்டிருந்த அவலநிலையை ஒழிப்பதற்காக கடந்த வருடம் முழு நாடும் ஒன்றாக எனும் போதைப்பொருளுக்கு எதிரான தேசிய செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இக்காலப் பகுதியில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதும், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைப்பதும் உள்ளிட்ட பல செயல்திறன் மிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் பெறப்பட்ட முன்னேற்றம் மற்றும் எதிர்வரும் ஆண்டுக்கான இச்செயற்திட்டத்தின் இயக்கப் பொறிமுறையைத் தீவிரப்படுத்துவது தொடர்பில், தேசிய சர்வமத மாநாடு ஜனாதிபதியின் தலைமையில் அலரி மாளிகையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் எமது எதிர்கால வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 20 தொன்னுக்கும் அதிகமான பல்வேறு வகையான நச்சுப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்தோடு 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவரப்படுவதை கட்டுப்படுத்துவதுடன், மறுபுறம் போதைப்பொருளுக்கான கேள்வியை குறைக்க புனர்வாழ்வுத் திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன என்றார்.