போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகமைய 44,806 சந்தேகநபர்கள் கைது!
Ad Space
Ad Space
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 44,806 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்தார்.
பத்தரமுல்லை பகுதியில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட முப்படையினரும் இணைந்து நாட்டில் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிக்கும் நோக்குடனும், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும் இந்த விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 221 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 14,761 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 223 கிலோ கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக 16,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 108 கிலோ கிராம் குஷ், 81 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 8,34,000 அதிகமான போதை மாத்திரைகளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய அளவிலான முழுநாடும் ஒன்றாக என்னும் விசேட நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 1 இலட்சத்து 3ஆயிரம் 899 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் உபயோகம் மற்றும் வர்த்தகத்துன் தொடர்புடையவர்களே அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 1,419 கிலோ கிராம் ஐஸ் , 526 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 3,898 கிலோ கிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
மேலும் விமான நிலையம் ஊடாகக் கொண்டுவரப்பட்ட 199 கிலோ கிராம் குஷ் மற்றும் 123 கிலோ கிராம் அசிஷ், 9,41,245 போதை மாத்திரைகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கைதான நபர்களில் 146 பேருக்கு எதிராகச் சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,018 சந்தேகநபர்களிடம் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது 1,669 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 3,096 பேர் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்திற்கு விசேட போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் இன்னும் பாரிய அளவிலான சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
Ad Space
Ad Space