போரில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எந்தவித தடையும் இல்லையென பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில்,

நினைவேந்தல் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. 

2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, தடை செய்யப்பட்ட அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை, அவ்வாறான செயற்பாடுகள் சட்டவிரோதமானவையாகும்.

எனினும், யுத்தத்தில் உயிரிழந்த தமது தாய், தந்தை, பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களின் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எவருக்கும் தடையில்லை

அத்துடன், தமிழர் நினைவேந்தல் நடவடிக்கைகளைத் தடைசெய்வதே அரசாங்கத்தின் நோக்கம் அல்ல, சட்டத்திற்கு முரணான வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்க முடியாது.

சில அரசியல் தரப்பினர் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ் – சிங்கள மக்களிடையே இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவருக்கும் ஒரே சட்டமே நடைமுறைப்படுத்தப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளது.

அண்மையில் நல்லூரில் முன்னெடுக்கப்பட்ட திலீபனின் நினைவேந்தல் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விளக்கங்களைப் பெற்று மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.