சாரதி அனுமதிப்பத்திரங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட போலி உத்தியோகபூர்வ ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் இருவர் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றுடன் நபர் ஒருவர் பிடிபட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், நாரஹேன்பிட்டி மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகிலுள்ள வீடொன்றில் வசிக்கும் நபரிடமிருந்து ரூ. 4,000 செலுத்தி அதனைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டைப் பொலிஸார் சுற்றிவளைத்து பிரதான சந்தேகநபரைக் கைது செய்ததுடன், அங்கிருந்து பின்வரும் போலி ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்:

அத்னபடி, 12 சாரதி அனுமதிப்பத்திரங்கள் , 8 தேசிய அடையாள அட்டைகள், 8 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும்  4 வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ. 7,500 முதல் விற்பனை செய்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட 32 மற்றும் 52 வயதுடைய சந்தேகநபர்கள் அங்கொடை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகிறது.