கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகளான 1.31 கோடி பேருக்கு ரூ.5 ஆயிரத்தை விடுவித்துள்ளது தமிழக அரசு. இது மூன்று மாதத்துக்கான முன்பணம் மற்றும் சிறப்புத் தொகை ஆகும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று (பிப்.13) காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. மகளிரின் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்.
‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி. வெல்வோம் ஒன்றாக!” என முதல்வர் ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை: கடந்த 2023-ல் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளன்று ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடங்கியது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக திமுக அறிவித்த ஏழு முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று. அப்போது 1 கோடியே 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தின் பயனாளிகளாக இருந்தனர்.
இந்த சூழலில் கடந்த ஆண்டு டிசம்பரில் 16,94,339 பயனாளிகள் சேர்க்கப்பட்டு திட்டம் விரிவு செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 30 லட்சத்து 69,831 என தற்போது உள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்று ரூ.5 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு வைப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space