நாட்டில் வாகன மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு சோதனைகளின் போது, 98 சந்தேகத்திற்கிடமான சட்ட மீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இயந்திர எண்ணெய் , கியர் எண்ணெய் , மற்றும் இதர வாகன மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களை உள்ளடக்கியதாக கடந்த ஒக்டோபர் 27 முதல் 30 ஆம் திகதி வரை இந்தச் சோதனைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.
ஏப்ரல் 12, 2023 நாளிட்ட 2327 36 இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலின் கீழ் வெளியிடப்பட்ட 88 ஆம் இலக்க பணிப்புரைக்கு அமையவே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதன் கீழ், மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ்களை இறக்குமதி செய்யும் அல்லது உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்துடன் முறையான செல்லுபடியாகும் ஒப்பந்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அத்துடன், விற்பனைக்கு வைக்கப்படும் தயாரிப்புகளில் அரசாங்க ஒப்பந்த எண், பொதியிடலிலோ அல்லது நிரந்தர லேபிளிலோ தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
சந்தைக்குச் சட்டவிரோதப் பொருட்கள் நுழைவதைத் தடுத்தல் மற்றும் நுகர்வோர் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை எளிதில் அடையாளம் காண உதவுவதே இந்த ஒழுங்குவிதிகளின் முக்கிய நோக்கமாகும் என அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், லேபிளில் அரசாங்க ஒப்பந்த எண் இடப்பட்டிருப்பது மாத்திரம் ஒரு பொருளின் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதையும் அதிகாரசபை தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், போதுமான சாட்சிகள் கிடைக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் பொறுப்பான தரப்பினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வாகன மசகு எண்ணெய் மற்றும் கிரீஸ் வாங்கும் போது நுகர்வோர் உற்பத்தியின் லேபிள்களைச் சரிபார்த்துக் கொள்வதுடன், அதற்கான கொள்வனவு இரசீதுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் இத்தகைய சந்தை சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனவும், சந்தேகத்திற்கிடமான சட்ட மீறல்கள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.