மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி : 40 பேர் உயிரிழப்பு, 16,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு
Ad Space
Ad Space
மடகாஸ்கரின் இரண்டாவது பெரிய நகரத்தை 'கெசானி' சூறாவளி தாக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மடகாஸ்கரின் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் (BNGRC) வெள்ளிக்கிழமை (13) மாலை வெளியிட்ட தகவலின்படி, 40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, 6 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 427 பேர் காயமடைந்துள்ளனர்.
புயல் காரணமாக 16,300-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெசானி சூறாவளி செவ்வாயன்று மடகாஸ்கரின் கிழக்கு கடலோர நகரமான துவாமசினாவில் (Toamasina) தரையிறங்கியது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 250 கி.மீ (155 மைல்) ஆக இருந்தது. மடகாஸ்கரின் புதிய தலைவரான கர்னல் மைக்கேல் ரண்டிரியானிரினா (Colonel Michael Randrianirina) தேசிய பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.
கெசானி சூறாவளி மடகாஸ்கரை கடந்த பிறகு , மொசாம்பிக் கால்வாய் பகுதியை அடையும் போது மீண்டும் பலம் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மொசாம்பிக் அதிகாரிகள் வியாழக்கிழமை (12) எச்சரிக்கை விடுத்துள்ளனர். பலத்த காற்று மற்றும் 10 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இத்தகைய அழிவுகரமான புயல்களால் மடகாஸ்கர் மற்றும் மொசாம்பிக் ஆகிய இரு நாடுகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.
Ad Space
Ad Space