சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்னுடன் ஒன்றிணைந்து போராடினார்.இன்று நான் தனியாக போராடுகிறேன். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களால் கடந்த 03 மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
கல்,மணல்,சரளை, மண் மற்றும் செங்கல் களிமண் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கான சட் அடிப்படை மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்கள் தொடர்பாக பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றை முன்வைக்கின்றேன்.
1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிமப் பொருட்கள் சட்டம்,2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க திருத்தச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஒழுங்குவிதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், அனுமதிப்பத்திரங்களை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி செயலணியின் வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது.
2026.07.06 அன்றைய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, 2026.08.31 திகதியிடப்பட்ட கைத்தொழில் வழிகாட்டுதல் இல. 01/ 2026 மூலம் மாவட்ட கண்காணிப்புக் குழுக்கள் நிறுவப்பட்டு, செப்டம்பர் 01 முதல் விண்ணப்பங்களை அவற்றிற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ் வழிகாட்டுதல்கள் சட்டங்களோ அல்லது ஒழுங்குவிதிகளோ அல்ல என்பதால் அவற்றின் சட்ட நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். கனிம வளங்கள் புதுப்பிக்கத்தக்கவை அல்ல என்பதால், உரிய மதிப்பீடு இன்றி அகழ்வுகளை விரைவுபடுத்துவதன் மூலம் வளங்கள் தீர்ந்துபோதலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படக்கூடும். அத்துடன் எதிர்காலத் தலைமுறையினரின் தேவைகள், கட்டுமானத் துறையின் நிலைத்தன்மை மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வழிகாட்டுதல்கள் சட்டத்தின் எவ்விதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றன? அவற்றின் சட்டபூர்வத்தன்மை தொடர்பாக சட்டமா அதிபரின் கருத்து பெறப்பட்டுள்ளதா? கடந்த காலங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்னுடன் ஒன்றிணைந்து போராடினார்.எனது போராட்ட தோழராகவும் இருந்தார்.இன்று நான் தனியாக போராடுகிறேன்.இது எனக்கு பாதிப்பாக உள்ளது.
அனுமதிப்பத்திர நிபந்தனைகள், சுற்றுச்சூழல் தேவைகள்,அரச கட்டணங்கள், போக்குவரத்து அனுமதிப்பத்திரங்கள் அல்லது கண்காணிப்பு முறைமைகள் தளர்த்தப்பட்டுள்ளனவா? அவ்வாறாயின், எத்தகைய நிபந்தனைகள், எச்சட்ட அதிகாரத்தின் கீழ் தளர்த்தப்பட்டுள்ளன?
மாவட்டக் குழுக்களின் பரிந்துரைகள் பணிப்பாளர் நாயகத்திற்குக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றனவா? ஏழு நாட்கள் கால அவகாசம் உரிய தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளுக்குத் தடையாக உள்ளதா?
தொடர்புடைய வழிகாட்டுதல்கள், திருத்தங்கள், அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் அமைச்சரவைப் பத்திரம் என்பன சபையில் சமர்ப்பிக்கப்படுமா?
2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை யாது? செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்ட, நிராகரிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் சராசரி செயலாக்கக் காலம் எவ்வளவு?
விரைவுபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரச் செயல்முறை கனிம அகழ்வு, எஞ்சிய கையிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதா? அவ்வறிக்கைகள் சபையில் சமர்ப்பிக்கப்படுமா?
தயாரிக்கப்பட்ட மணல் , மாற்றுப் பொருட்கள், கட்டுமானக் கழிவுகளை மீள்சுழற்சி செய்தல் மற்றும் இயற்கை கனிமங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் தொடர்பான தேசியக் கொள்கை ஒன்று உள்ளதா? இல்லையாயின், அது எப்போது அறிமுகப்படுத்தப்படும்? அனுமதிப்பத்திரச் செயல்முறை எப்போது சட்டபூர்வ ஒழுங்குவிதிகளின் கீழ் கொண்டு வரப்படும்?
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களால் கடந்த 03 மாத காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய புகைப்படங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன்.
சாபி நகர் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. .அந்த சம்பவம் தொடர்பில் குரல் கொடுத்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று மௌனித்துள்ளார்கள். அந்த சம்பவத்துக்கு இன்றுவரை நீதிக்கிடைக்கவில்லை என்றார்.