மதியிறுக்கம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம்
Ad Space
Ad Space
மதியிறுக்கம் ( ஆட்டிஸம்) நோயால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. விசேட பாதுகாப்பு மத்திய நிலையங்களை நிர்மாணிப்பதற்கும், அவர்களுக்குரிய மருத்துவ வசதிகளை வழங்குவற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட மட்டத்தில் விசேட செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற நோய்களால் அவதியுறும் பிள்ளைகளை முன்கூட்டியே இனங்கண்டு அதற்கு சிகிச்சையளிக்கும் செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்தில் 16 வைத்தியசாலைகள், தெற்கு மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், சப்ரகமுவ மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள், வடமேல் மாகாணத்தில் 07 வைத்தியசாலைகள்,
வடமத்திய மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள், மத்திய மாகாணத்தில் 09 வைத்தியசாலைகள், ஊவா மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள்,கிழக்கு மாகாணத்தில் 03 வைத்தியசாலைகள், வடக்கு மாகாணத்தில் 02 வைத்தியசாலைகள் என்ற அடிப்படையில் 55 வைத்தியசாலைகளில் குழந்தை மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள்.
இவ்வாறான வைத்தியசாலைகளில் ஆட்டிஸம் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்குதம் கிளினிக்குகள் இயங்கும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 20 ஆக காணப்படுகிறது.
இந்த வைத்தியசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு 2025 ஆம் ஆண்டு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.இந்த ஆண்டு மேலதிகமாக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நோயால் அவதியுறும் பிள்ளைகளை பாதுகாக்க விசேட பாதுகாப்பு மையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
Ad Space
Ad Space