மது அருந்தியதற்காக பணம் அறவிட்ட மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய கும்பல்
Ad Space
Ad Space
மட்டக்களப்பு புதூர் பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திய கும்பலிடம் பணம் கேட்ட அதன் முகாமையாளரின் தலையில் மதுபான போத்தலினால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை (16) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து மதுபானம் அருந்தும் வசதி கொண்ட மதுபானசாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு மது அருந்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த கும்பல் சென்று மதுபானம் அருந்தியுள்ளது.
பின்னர், அருந்திய பானத்துக்கான பணத்தை, அதன் முகாமையாளர் கேட்டதற்கு, அந்த நபர்கள் முகாமையாளரின் அறைக்குள் சென்று, முகாமையாளரின் தலையை மதுபான போத்தலைக் கொண்டு தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில் தலைமறைவாகியிருந்த ஒருவரை இன்று கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.
Ad Space
Ad Space