மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் நால்வர், மேலும் ஒரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29) பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே மேற்படி சந்தேகநபர்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மீட்டியாகொடை மாவத்தகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை வீடொன்றினைச் சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கான 6 தோட்டாக்கள், 13 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்திருந்தனர்.
மேலும் அதே வீட்டிலிருந்த மற்றொரு நபரும் 14 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைதானார். குறித்த சந்தேகநபர்கள் இருவரும், கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி மீட்டியாகொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், அதற்கு உதவி ஒத்தாசை வழங்கியவருமே கைதாகியுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுவேளை மீட்டியாகொடை வீட்டில் வைத்து 11 கிராம் 500 மில்லிகிராம், 10 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயினுடன் மேலும் இரு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் கடந்த வருடம் மே 3 ஆம் திகதி எரணவில பகுதியில் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர் எனவும் விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. இதேவேளை கைதான நபர்கள் 22, 23, 28 மற்றும் 34 வயதுடைய மீட்டியாகொடை மற்றும் மாதம்பை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
வெளிநாட்டில் உள்ள பாதாள உலகக்குழுத் தலைவன் என அறியப்படும் நபர் ஒருவரின் சகோதரருக்குச் சொந்தமான வீட்டிலேயே இவர்கள் தங்கியிருந்து மற்றுமொரு நபரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மனிதப் படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 4 பேர் துப்பாக்கியுடன் கைது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space