மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் வியாழக்கிழமை (29) காலை முதல் மாலை வரை சாரதிகளை இலக்கு வைத்து திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்க பட்ட நிலையில் மூன்று பேர் போதைப் பொருளைப் பயன்படுத்தி உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மன்னார் பொலிஸார் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வைத்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போதைப்பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்துவோரை கண்டறிந்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் போதைப்பொருள் பாவனை இன்றி பொறுப்புடன் செயற்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் அரச தனியார் பேருந்து சாரதிகள்,முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாகன சாரதிகள், மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என 110 பேர் போதைப் பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்,அவர்களில் மூன்று பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.