ட்ரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள ஒரு மயானத்தில் குறைந்தது 50 பச்சிளம் குழந்தைகளின் சடலங்கள் உட்பட 56 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்கள் போர்ட் ஒஃப் ஸ்பெயின் (Port of Spain) தலைநகரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள குமுடோ என்ற நகரில் உள்ள மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த சடலங்கள் மயானத்தில் போடப்பட்டமையானது, உரிமை கோரப்படாத உடல்களை "சட்டவிரோதமான முறையில் அப்புறப்படுத்திய" ஒரு செயலாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவில் மிக அதிக வன்முறை கொலைச் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக ட்ரினிடாட் அண்ட் டொபாகோ விளங்குகிறது. அந்த வகையில், இந்த சடலங்களின் பின்னணியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வன்முறைக் கும்பல்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறும் விசாரணை அதிகாரிகள், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குறித்த மயானத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பெரியவர்களின் சடலங்கள் இருந்துள்ளன. அதில் ஐந்து சடலங்களின் அடையாள அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இதில் இரண்டு சடலங்களில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மயானத்தில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தனக்கு மிகவும் கவலையளிப்பதாகவும் இதனுடன் தொடர்புடைய நபர்கள் அல்லது நிறுவனங்கள் யாராக இருந்தாலும் அவர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என பொலிஸ் ஆணையர் அலிஸ்டர் குவேரோ தெரிவித்துள்ளார்.
மார்ச் 2ஆம் திகதி முதல் அந்த நாட்டில் நடைமுறையில் உள்ள அவசர நிலை பிரகடனம் தற்போதும் நீடிக்கிறது. இது, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பொலிஸார் தேடுவதற்கும் கைது செய்வதற்கும் வழிவகுப்பதாக கூறப்படுகிறது.
மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 56 சடலங்கள் ; அதில் 50 குழந்தைகளின் சடலங்கள்! - ட்ரினிடாட் அண்ட் டொபாகோவில் சம்பவம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space