மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கோரி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் புதிய சட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

மேய்ச்சல் தரைகளிலிருந்து சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதாக முன்னர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை என்றும், ஆக்கிரமிப்புகள், மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்படுதல் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்வதாகவும் தெரிவித்து இந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படவுள்ளன. முன்னைய மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் சாணக்கியன் இராசமாணிக்கன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மீண்டும் முன்னிலையாகி அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர், இலங்கை மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், மட்டக்களப்பு மாவட்ட வன அலுவலர், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாவட்ட நிர்வாகம்,  காணி முகாமைத்துவம், வனப் பாதுகாப்பு, மாகாண நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறை உள்ளிட்ட பொறுப்புகளைக் கொண்ட நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் இடம்பெறும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உள்ள பொறுப்புகள் தொடர்பிலும் இந்த வழக்கு கவனம் செலுத்துகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகிய மூவரின் ஆட்சிக்காலங்களையும் கடந்து மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினை தொடர்ந்து வருகின்றது.

பிரச்சினை தொடர்பில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கவனம் செலுத்தியதுடன், தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தாலும், கால்நடை வளர்ப்பாளர்களிடமிருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் நிரந்தரத் தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன.

நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, நிர்வாகத் தலையீடுகள் எவ்வளவு பயனுள்ளதாக அமைந்துள்ளன, பாரம்பரிய வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் அரச நிறுவனங்கள் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுகின்றனவா போன்ற கேள்விகளை இந்தப் புதிய சட்ட நடவடிக்கை எழுப்பியுள்ளது.

தமது பாரம்பரிய வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் நிலங்களைப் பாதுகாப்பதற்காகக் கால்நடை வளர்ப்பாளர்கள் மீண்டும் மீண்டும் போராடவேண்டியோ, அரசியல் தலையீட்டைக் கோரவேண்டியோ அல்லது நீதிமன்றத்தை நாடவேண்டியோ இருக்கக்கூடாது என்பதே சாணக்கியன் இராசமாணிக்கனின் நிலைப்பாடாகும்.

மேலதிக ஆக்கிரமிப்புகளைத் தடுத்து நிறுத்துதல், மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் அச்சுறுத்தல்களின்றி தமது வாழ்வாதாரத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய அவசியமாகும்.

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கும், பொறுப்புடைய அரச நிறுவனங்களிடமிருந்து உரிய பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் இந்தப் புதிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக சாணக்கியன் தெரிவித்துள்ளார்.