நுவரெலியா, அம்பேவலை - பட்டிபொல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களை நுவரெலியா மாவட்ட வன அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
12 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை (13) நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒருவருக்கு 45,000 ரூபா வீதம் ஐந்து பேருக்கு 2,25,000 ரூபா அபராதமும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குச் சேதம் ஏற்படுத்தியமைக்கான இழப்பீடாக 25,000 ரூபாவும் உட்பட மொத்தம் 2,50,000 ரூபாவைச் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பெல்மடுல்ல, பலங்கொடை, நாவலப்பிட்டி மற்றும் அம்பேவலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 40 வயதிற்குட்பட்ட நபர்களுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் பல நாட்களாக குறித்த வனப்பகுதியில் கொத்மலை ஓயாவிற்கு நீர் செல்லும் எல்ஜின் ஓயா அருகே பெரிய குழிகளைத் தோண்டி, மாணிக்கக்கல் அடங்கிய படிமங்களை எடுத்து எல்ஜின் ஓயாவில் கழுவி பெருமளவில் சுற்றாடல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட வன அதிகாரிகள் தெரிவித்தனர்.




