இலங்கையின் பெருந்தோட்டத்துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கியூ.ஆர் குறியீட்டு முறைமை ஊடான உர விநியோகம் பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கியூ.ஆர் குறியீட்டு முறையின் கீழ் உரங்களைப் பெறுவதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மார்ச் 31 வரை சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகள் 187,759 பேருக்கு 21,117.7 மெட்ரிக் டொன் மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாங்கம் மூலம் 50 கிலோ உர மூட்டைக்கு 4,000 ரூபாயும், 25 கிலோ உர மூட்டைக்கு 2,000 ரூபாயும் நிதி உதவித்தொகையும் வழங்குகிறது.
இதுவரையான காலப்பகுதியில் 50 கிலோ உர மூட்டைகள் 334,256வும், 25 கிலோ உர மூட்டைகள் 176,199வும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் 84,472 விவசாயிகளுக்கு மட்டுமே மானிய உரம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் புதிய கியூ.ஆர் முறையின் கீழ் 6 மாதங்களில் 187,759 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டுள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு இக்காலப்பகுதியில் 13,015.50 மெட்ரிக் டொன் உரம் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய முறையின் கீழ் கடந்த மாதம் மார்ச் இறுதிக்குள் 21,117.7 மெட்ரிக் டொன் உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதனால் உர விநியோகம் 62.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர்நிலை காரணமாக, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு கூடுதல் உர உதவி நிதித்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, வழங்கும் உதவி நிதித் தொகைக்கு மேலாக இந்த ஆண்டில் ஒருமுறை மாத்திரம் 50 கிலோ உர மூட்டைக்கு 5,000 ரூபாய் மேலதிகமாக வழங்க பொருளாதார அமைச்சகம் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த மேலதிக நிதியையும் கியூ.ஆர் முறையின் கீழ் இந்த ஆண்டு இறுதிக்கு முன்னர் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராம் வரை உயர்த்தவும், ஏற்றுமதி வருவாயை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
மானிய உர விநியோகத்தில் புதிய திருப்பம் - பெருந்தோட்ட அமைச்சு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space