மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் போராடி தமது உயிரை இனத்துக்காக அர்ப்பணித்த எம் உறவுகளுக்கு உயரிய சபை ஊடாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன் .
அனோஜன் விடயத்தில் மிகவும் சிக்கலாக இருந்த காரியத்தை முறையாக கையாண்டு அவரை விடுதலை செய்தமைக்காக ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவுக்கும் மற்றும் இதற்காக உதவிய அனைவருக்கும் அந்த குடும்பத்தினர் சார்பாகவும் எனது சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கியமான துறைகளில் சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. அதேபோன்று பெருந்தோட்டத் துறை மற்றும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களும் அந்நியசெலாவணியை கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாத்துறை என்பது மிகவும் முக்கியமான துறையாகும். இதனை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் வேகமாக முன்னெடுக்க வேண்டும். கடந்த காலங்களில் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டாலும் சுற்றுலாத்துறை ஓரளவுக்கு முன்னேறுகின்றது. அத்துடன் அந்நியசெலாவணியை தருக்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தேவையான விடயங்களையும் ஏற்படுத்த வேண்டும்.
எமது நாடு கடற்கரையால் சூழப்பட்ட தீவாக இருக்கின்றது. இதனால் எமது நாட்டை சொர்க்கப்புரியாக மாற்றக்கூடிய அளவுக்கு சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப முடியும். அவ்வாறு இதனை கட்டியெழுப்ப வேண்டும். மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையில் உள்ள கடற்கரை சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். தென்னிலங்கை பகுதியில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்வதை போன்று கிழக்கில் உள்ள சுற்றுலாத்தளங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது சுற்றுலாத்துறை மூலம் நாட்டின் வருவாயை அதிகரிக்க முடியும் என்றார்.