மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய கடந்த திமுக ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.
இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்வெட்டுக்கான காரணங்கள் குறித்து அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்களை ஏற்க முடியாது.
தமிழகத்தின் மொத்த மின்தேவை 22 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ள நிலையில், 84 சதவீத மின்சார தேவைக்காக மத்திய அரசு மற்றும் தனியார் மின்நிலையங்களையே தமிழகம் சார்ந்துள்ளது.
சொந்த மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்ய ஆகும் செலவைவிட, பல மடங்கு அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரம் வாங்கப்படுகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்ந்து நஷ்டம் அடைவதற்கும், மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.2.50 லட்சம் கோடியை தாண்டியதற்கும் இதுவே முதன்மைக் காரணம்.
திமுக ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, மொத்தம் 5,700 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டங்களை அமைக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் இருந்தன. திமுக அரசு நினைத்திருந்தால், அனைத்து மின் திட்டப் பணிகளையும் நிறைவேற்றி முடித்து, உற்பத்தியை தொடங்கியிருக்க முடியும்.
ஆனால், அதிமுக ஆட்சியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்திருந்த வடசென்னை 3-வது அனல் மின்நிலையத்தில் (800 மெகாவாட்) மட்டும்தான் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதத்தில் வணிகரீதியான மின்னுற்பத்தியை தொடங்கியது.
மீதமுள்ள 4,900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி நிலையப் பணிகள் இதுவரை முடியவில்லை. தமிழகத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும் என்றால், மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும்.
கடந்த ஆட்சியில் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதநிலையில், புதிய அரசு இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனல் மின் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன. அவை எப்போது உற்பத்தியை தொடங்கும்.
புதிதாக என்னென்ன மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. கார்பன் சமநிலையை அடைவதற்காக தமிழகத்தில் எப்போது அனல் மின் உற்பத்தியை முடிவுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space