மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், கடற்றொழில் துறையின் அபிவிருத்திக்கும் இவ்வாண்டு ரூ.20 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று (21) சனிக்கிழமை காலி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடற்றொழில் துறையின் அபிவிருத்தி மற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இவ்வாண்டு கடற்றொழில் அமைச்சுக்கு ரூ.15,400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அமைச்சுகள், மாவட்டங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடுகளையும் இணைத்துப் பார்க்கும்போது, மீனவ சமூகத்தின் மேம்பாட்டிற்காக ரூ.20 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

உலக மீனவர் தினமான 21.11.2026 அன்றைய தினம் காலி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், கடற்றொழில் துறையில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மீனவ சமூகத்தை இழிவாகப் பார்க்கும் மனப்பான்மையையும், ‘மீன்காரர்கள்’ எனக் குறைத்து மதிப்பிடும் சமூகப் பார்வையையும் மாற்ற வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. நாட்டின் மக்களுக்கு அத்தியாவசியமான புரதச் சத்தினை வழங்கும் முக்கியமான சமூகமாக மீனவர்கள் மதிக்கப்பட வேண்டும். இந்தத் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களின் சமூக அந்தஸ்தும், அவர்களுக்கான மதிப்பும் உயர்த்தப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள 24 மீன்பிடித் துறைமுகங்களையும் நேரில் பார்வையிட்டபோது, அவற்றில் பல முறையான நிர்வாகம், பராமரிப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் இன்றி மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. துறைமுகங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசியல் தலையீடுகள் மற்றும் முறையான திட்டமிடல் இல்லாத நிர்வாக நடைமுறைகள் காரணமாக அவற்றின் செயல்திறன் பாதிக்கப்பட்டுள்ளன. பல துறைமுகங்கள் பெயரளவிலேயே இயங்குகின்றன. அவற்றை முறையான செயற்பாட்டுடன் கூடிய, மீனவ மக்களுக்குப் பயனளிக்கும் இடங்களாக மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

மீன்பிடித் துறைமுகங்களைச் சீரமைத்து, அவற்றைச் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய முறையான சேவை மையங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்த அபிவிருத்திப் பணிகள் வெற்றியடைய மீனவ மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. துறைமுகங்கள் அரசாங்கத்தின் சொத்துக்களாக இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் என்பதால், அவற்றைப் பாதுகாப்பதில் மீனவ சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது. துறைமுகங்களைப் பாதுகாத்து, அவற்றின் வளங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கு மீனவ மக்களும் முன்வர வேண்டும்.

அதேபோன்று, நாடு முழுவதும் காணப்படும் மீன் விற்பனை நிலையங்கள் மற்றும் சந்தைகளின் நிலைமைகளையும் மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, நாட்டின் பிரதான மீன் விற்பனை மையமான பேலியகொடை மீன் சந்தையை நவீன வசதிகளுடன் கூடிய, சுகாதாரமான மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான சந்தையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மீன் கொள்வனவு செய்யும் பொதுமக்கள் சிரமமின்றி, சுகாதாரமான சூழலில் மீன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சந்தைகளை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மீன் சந்தைகளுக்கு பொதுமக்கள், குறிப்பாக குடும்பத்தினர் மற்றும் சிறுவர்கள் செல்லக்கூடிய சுத்தமான, ஒழுங்கான, சுகாதாரமான சூழலை உருவாக்க வேண்டும். மீன் கொள்வனவு செய்வதற்காகச் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் தற்போதைய நிலை மாற்றப்பட்டு, மீன் வாங்குவதற்கு விருப்பத்துடன் செல்லக்கூடிய சந்தைகளாக அவை உருவாக்கப்பட வேண்டும். இதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறிய மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மீனவ மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, துறைமுகங்களின் வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்தி, கடற்றொழில் நடவடிக்கைகளைச் சிறந்த முறையில் முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மீனவ சமூகத்தினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் குழுக்களின் இலக்காக மாற்றப்படுவது தொடர்பில் சமூகத்தில் காணப்படும் கவலைகளும் உள்ளன. போதைப்பொருள் ஒழிப்பிற்காக அரசாங்கம் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இத்தகைய சமூக அழிவுகளைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். போதைப்பொருள் பாவனையால் அழிவது தனிநபர்கள் மட்டுமல்ல, குடும்பங்களும், இளைஞர்களும், எதிர்கால சந்ததியினருமாகும்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் 22,000 கோடி ரூபாவாகும். இவ்வளவு பெறுமதியான போதைப்பொருட்கள் நாட்டுக்குள் சுதந்திரமாகப் பரவி, விற்பனை செய்யப்பட்டிருந்தால், அதன் பாதிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும் அழித்திருக்கும். போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய ஒரு இருண்ட உலகம் நாட்டில் உருவாகுவதற்கு கடந்த காலங்களில் இடமளிக்கப்பட்டிருந்தது. அந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து, போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்னும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டிய நிலைமைகள் காணப்படுவதால், அதற்குப் பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது.

அதேவேளை, வரவு செலவுத் திட்ட விவாதங்களில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கருத்துகளைப் பார்க்கும்போது, கடந்த 76 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் தாங்களே என்ற அடிப்படையில் பேசுவதைப் போன்ற நிலை காணப்படுகின்றது. ஆனால், நாட்டின் மக்கள், குறிப்பாக காலி மாவட்ட மக்கள், கடந்த காலங்களையும் தற்போதைய மாற்றங்களையும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கோ, தவறான கருத்துகளை உருவாக்குவதற்கோ இடமளிக்க முடியாது.

அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளே கடந்துள்ள நிலையில், நாட்டில் காணப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண முடியாது. இருப்பினும், பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மீனவ சமூகத்தின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டு, அவர்களின் வாழ்க்கை நிலைமைகளைப் படிப்படியாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

காலி மாவட்டத்தின் அபிவிருத்திக்கும் மீனவ சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவர்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என மேலும் தெரிவித்தார்.