கற்பிட்டி கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதையும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு, கற்பிட்டி பிரதேச மீனவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வூட்டும் விசேட நிகழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், வடமேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் கற்பிட்டி பிரதேச மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன், இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு சந்திப்பின் போது பிரதானமாக கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துதல்,சட்டபூர்வமான பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்,சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்குத் தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் பொறிமுறையை வலுப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புடன் செயற்படுதல், ஆகிய விடயங்கள் குறித்து மீனவ சமூகத்தினருக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி), கற்பிட்டி பிரதேச செயலாளர், கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர், கற்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இலங்கை கடற்படைக் கப்பல் 'விஜய' நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் மஹெஷ் குலசிறி உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள், மற்றும் வனப் பாதுகாப்பு, கடல்சார் சுற்றுச்சூழல், வனவிலங்கு, கரையோரப் பாதுகாப்பு, மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களங்களின் அதிகாரிகள், மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.