சிவில் விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை மார்ச் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கின் முதலாவது சாட்சியாளரை சாட்சியம் அளிப்பதற்காக மார்ச் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்ததுடன், பிடியாணை பிறப்பிக்குமாறும் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சாட்சி விசாரணை மார்ச் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு மே தினப் பேரணியில் கலந்துகொண்ட தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குமாறு முன்னாள் அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 03 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவித்ததன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தி 'ஊழல்' புரிந்ததாகக் குற்றம் சுமத்தி, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.