அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் 'மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்' பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஃபௌஸ்டோ இசிட்ரோ மெசா ஃப்ளோரஸ் எனப்படும் 'சாப்போ இசிட்ரோ', மெக்சிகோ விசேட படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (20) இரவு மெக்சிகோவின் சினலோவா மாநிலத்தின் குவாசாவே நகரில் அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் மெக்சிகோ விசேட படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, ஏற்பட்ட கடும் துப்பாக்கிச் சண்டை மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் 7 சந்தேகநபர்கள் கொல்லப்பட்டதுடன், பாதுகாப்பு உதவிக்காகச் சென்ற 4 மெக்சிகோ இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
இசிட்ரோ மெசா ஃப்ளோரஸ் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அவரது இரண்டாம் நிலைத் தலைவரும் உறவினருமான நபர் மற்றும் குழுவின் நிதி நிர்வாகியான அவரது மைத்துனர் ஆகியோரும் அடங்குகின்றனர்.
இவர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இராணுவ விமானம் மூலம் மெக்சிகோ சிட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், கிரனேட் லாஞ்சர் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கைதைத் தொடர்ந்து சினலோவா மாநிலத்தின் குவாசாவே, அஹோம் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் கும்பல்கள் வீதிகளை மறித்து வாகனங்களுக்குத் தீவைத்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பான இடங்களுக்குள் தங்கியிருக்குமாறு ஹெர்மோசிலோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1990-களிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் 44 வயதான 'சாப்போ இசிட்ரோ', 'குவாசாவே கார்டெல்' அமைப்பின் தலைவராவார். அமெரிக்காவுக்குள் ஃபெண்டானில், கொக்கைன், ஹெரோயின் மற்றும் மெத்தம்பெட்டமைன் ஆகியவற்றை பெருமளவில் கடத்தியமை, ஆட்கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 2025 பெப்ரவரியில் FBI-இன் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்தைத் தொடர்ந்து மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இவரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா கோரியுள்ளது.