மெக்சிக்கோவின் பாஜா கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் 4.7 முதல் 4.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை பதிவாகியுள்ளது.
மேலும், தெற்கு கலிபோர்னியா மற்றும் தென்மேற்கு அரிசோனாவின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வுகள் ஏற்ப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பசுபிக் நேரப்படி காலை 10:27 மணிக்கு, மெக்ஸிகாலி என்ற எல்லை நகரத்தில் இருந்து சுமார் 22 மைல் தென்கிழக்கில் பாஜா கலிபோர்னியா, மற்றும் அரிசோனா ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, டெல்டா குடியிருப்பு பகுதிக்கு வடக்கே, சுமார் 10 மைல் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்று செவ்வாய்கிழமை (03) காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்ப்பட்ட அதே பிராந்தியத்தில், நேற்று முன்தினம் திங்கட்கிழமை (02) அன்று 2.8 முதல் 3.3 ரிக்டர் அளவிலான குறைந்தது மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பின் பல அதிர்வுகளும் பதிவு செய்யப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் மெக்சிகாலி பகுதியில் சில அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
எனினும் இதுவரை பெரிய அளவில் உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .