அத்துருகிரிய காவல் துறை பிரிவிற்குட்பட்ட பலன்வத்தை பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி வைத்திருந்தமை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹன்வெல்ல, பாதுக்கை, கொட்டாவை மற்றும் மீகஹவத்தை காவல் துறை நிலையங்களில் பதிவான நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரும், கழற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்களை வைத்திருந்த வேறு இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய காவல் துறையால்  10 கிராம் 800 மில்லிகிராம் 'ஐஸ்' (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) போதைப்பொருளுடன் கடந்த சனிக்கிழமை  (21)  கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளியான தகவல்களின் அடிப்படையில், நேற்று  (25) புதன்கிழமை  மாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் 19 முதல் 39 வயதிற்குட்பட்ட ஹோக்கந்தர மற்றும் அத்துருகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.