வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (12.06.2026) மாலை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது
இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.அச்சுதனுடன் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் ஆராய்ந்திருந்தோம். அதற்கமைவாக நாம் சில துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களம் தயாராகவுள்ளது. எனவே, அதற்கான கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்டச் செயலாளர்களை வடக்கு மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்தும் வடக்கு மாகாண ஆளுநர் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையின் அபிவிருத்தி சார்ந்த தேவைகளை விளையாட்டு உத்தியோகத்தர்கள் முறையாக அடையாளம் காண வேண்டும். அத்தேவைகளை மாவட்டச் செயலாளர்கள் ஊடாக விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு முன்வைப்பதன் மூலம் எமக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மாகாணத்துக்கான மிகப் பெரிய திட்டங்களை மாகாண விளையாட்டுத் திணைக்களம் தயாரித்து விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுக் கேள்விப் பத்திரங்கள் மூலம் ஒப்பந்தங்களை வழங்கிய பின்னரே அதற்கான நிதியை அவர்கள் விடுவிப்பார்கள். எனினும், இந்த ஆண்டுக்குள் மிகப் பெரிய திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான கால அவகாசம் குறைவாகக் காணப்படுவதால், நடப்பு ஆண்டுக்குள் நிறைவேற்றக்கூடிய சாத்தியமான திட்டங்களை மாத்திரம் துரிதமாக முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில், மாகாணத்தில் விளையாட்டுப் பயிற்சிகளை முன்னெடுக்கும் பாடசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களின் பட்டியல் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக மாவட்டச் செயலாளர்களுக்கு முன்வைக்கப்படுமெனவும் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதற்கான பொருத்தமான காணி கோரப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினார்.
யாழில் வடக்கு மாகாண விளையாட்டு அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space