ராஜாங்கனை சத்தாரதன தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இன்று ( 25) இந்த பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளார்.மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ராஜாங்கனை சத்தாரதன தேரர் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட அவருக்கு, பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அவதூறான அல்லது மத நல்லிணக்கத்தை பாதிக்கும் கருத்துகளை வெளியிடக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னரும், சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து, 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி, பிணை நிபந்தனைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தற்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்துவதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அநுராதபுரம் ருவான்வெலி வளாகத்திற்கு நவம்பர் 12 அன்று ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் மற்றும் ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.