சந்தையில் நிலவும் லாஃப்ஸ் (Laugfs) எரிவாயுத் தட்டுப்பாடு மற்றும் 1,675 ரூபாவுக்கும் அதிகமான திடீர் விலை உயர்வு குறித்து ஆராய்வதற்காக, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாகத்தினருக்கும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (17) வர்த்தக அமைச்சில் அவசரச் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,
கடந்த இரண்டு மாதங்களாக மஞ்சள் நிற லாஃப்ஸ் சிலிண்டர்களை வைத்துக்கொண்டு எரிவாயுவின்றித் தவித்து வந்த நுகர்வோருக்கு, தற்போது 3,000 மெற்றிக் தொன் எரிவாயு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு பாரிய தொகையால் விலையை அதிகரிப்பது நியாயமற்றது என அதிகாரசபை சுட்டிக்காட்டியதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உயர்த்தப்பட்ட விலையிலிருந்து குறைந்தபட்சம் 1,000 ரூபாவையாவது உடனடியாகக் குறைத்து அறிவிக்குமாறு லாஃப்ஸ் நிறுவனத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமது நிறுவனம் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகள், இறக்குமதிச் செலவுகள், வரிகள் மற்றும் வங்கிப் பொறுப்புகள் காரணமாக நிறுவனத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் அதனை விற்பனை செய்வது குறித்தும் அண்மையில் தமது நிர்வாக மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக லாஃப்ஸ் நிர்வாகத்தினர் இதன்போது தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலையான 4,365 ரூபாவுடன் ஒப்பிடுகையில், லாஃப்ஸ் சிலிண்டரின் விலை சுமார் 2,380 ரூபா வரை அதிகமாகக் காணப்படுவது நுகர்வோருக்குக் கடுமையான சுமையாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையைக் கருத்திற்கொண்டு, நுகர்வோருக்கு வழங்கக்கூடிய விலைச் சலுகை குறித்துத் தமது பணிப்பாளர் சபையில் கலந்துரையாடி இன்று (17) மாலைக்குள் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாக லாஃப்ஸ் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இதேவேளை, எரிவாயு விநியோகத்தைத் தாமதப்படுத்தி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியமை தொடர்பில் லாஃப்ஸ் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இரு வேறுபட்ட நிறுவனங்கள் என்பதால் லாஃப்ஸ் சிலிண்டர்களை நேரடியாக லிட்ரோ சிலிண்டர்களாக மாற்றிக்கொள்ள முடியாது எனவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
இருப்பினும், சந்தையில் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் 90 சதவீதப் பங்களிப்பை வழங்கும் அரச நிறுவனமான லிட்ரோ, நுகர்வோரின் நெருக்கடியைத் தணிப்பதற்காக மேலும் 100,000 புதிய எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவற்றில் 40,000 சிலிண்டர்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன.
உலகச் சந்தையில் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால் லிட்ரோ நிறுவனம் நவம்பர் மாதத்தில் 800 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்ட போதிலும், ஒக்டோபர் மாத இறுதியில் ஈட்டப்பட்ட 5,900 மில்லியன் ரூபா இலாபத்தைக் கொண்டு மக்கள் நலன் கருதி அரசாங்கம் அந்த நட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், தொழில்துறை பயன்பாட்டு எரிவாயு மற்றும் 37.5 கிலோகிராம் சிலிண்டர்களை விற்பனை ஊடாகக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு லிட்ரோ நிறுவனம் தனது இழப்புகளை ஓரளவு ஈடுசெய்து, மக்கள் மீதான விலை அழுத்தத்தைக் குறைத்து வருகின்றதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.