நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை தடையின்றி பேணத் தவறியமை மற்றும் நுகர்வோருக்கு ஏற்பட்ட நெருக்கடி தொடர்பில், லாப் கேஸ் நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லாப் சிலிண்டர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

அதிகாரசபையின் தொடர் அறிவித்தல்களுக்குப் பின்னரும் விநியோகம் சீராகாத நிலையில், நீதிமன்றம் லாப் நிறுவனத்திற்கு அழைப்பாணை விடுத்துள்ளதுடன், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நுகர்வோர் அதிகார சபையினால் வெள்ளிக்கிழமை (30) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த விநியோகத் தடைக்குப் பின்னணியில் லாப் நிறுவனம் எதிர்கொண்டுள்ள பல தொழில்நுட்ப மற்றும் நிதிச் சிக்கல்கள் காரணியாக அமைந்துள்ளன. இலங்கைத் தரநிலைகளின்படி, சந்தையில் விநியோகிக்கப்படும் எரிவாயு கலவையில் 70 சதவீத பியூட்டேன் (Butane) மற்றும் 30 சதவீத புரொப்பேன் (Propane) காணப்பட வேண்டும். 

ஆனால் உலகச் சந்தையில் இந்த 30:70 விகிதத்தில் மொத்தமாகக் கொள்முதல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், லாஃப்ஸ் நிறுவனத்திற்குத் தனியான விநியோகஸ்தர் ஒருவர் இல்லாத நிலை உருவானது. இதனால் அரசுக்குச் சொந்தமான லிட்ரோ நிறுவனத்திற்கு எரிவாயு வழங்கும் விநியோகஸ்தரிடமிருந்தே சிறிய அளவில் எரிவாயுவைப் பெற லாப் முயன்றபோதிலும், அந்த விநியோகஸ்தர் லாஃப்ஸ் நிறுவனத்திற்கு எரிவாயு வழங்க மறுத்துவிட்டார்.

மேலும், ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள லாப் முனையத்தில் பியூட்டேன் மற்றும் புரொப்பேனைக் கலந்து தயாரிக்கும் வசதி காணப்பட்டாலும், உடன்படிக்கைகளின்படி உள்ளூர் சந்தைக்கு 20 சதவீத எரிவாயுவை மட்டுமே அவர்களால் விநியோகிக்க முடியும். எஞ்சிய 80 சதவீத தேவையை லிட்ரோ நிறுவனமே பூர்த்தி செய்கிறது. லாப் நிறுவனத்தின் இந்தச் சேவைக் குறைபாடு காரணமாக, சந்தையில் லிட்ரோ எரிவாயுவுக்கான தேவையும் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளது.

கடந்த காலங்களில் விநியோகத் தடைகள் ஏற்பட்டபோதெல்லாம், தமது 20 சதவீத சந்தைப் பங்களிப்பு எல்லையை அதிகரித்துத் தருமாறு லாப் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் 'தித்வா' பேரிடர் சூழலைக் கருத்திற் கொண்டு வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தற்காலிகமாக அந்த எல்லையை உயர்த்த அனுமதியளித்திருந்தார்.

எனினும், கடந்த ஏப்ரல் மாதத்திலும் லாப் நிறுவனம் விநியோகத்தைச் சீராகப் பேணத் தவறியதால், மீண்டும் விடுக்கப்பட்ட கோரிக்கையை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நிராகரித்தார். அதற்குப் பதிலாக, அரசுக்குச் சொந்தமான லிட்ரோ நிறுவனம் மூலமாகவே விநியோகத்தை அதிகரிக்கவும், புதிய நீல நிறச் சிலிண்டர்களை அதிகளவில் சந்தைக்கு வெளியிடவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

தற்போதும் லாப் நிறுவனம் விநியோகத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், பயன்பாடற்ற லாப் சிலிண்டர்களை வீடுகளில் வைத்திருப்பதைத் தவிர்த்து, விநியோகத்தில் உள்ள லிட்ரோ எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக, லாப்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செலுத்திய ஆரம்ப வைப்புத் தொகையை மீள வழங்குமாறு நுகர்வோர் அதிகாரசபை உத்தரவிட்டது.

ஆனால், எரிவாயு சிலிண்டர்களின் பழமை மற்றும் பாவணையைக் காரணம் காட்டி, சுமார் 1,000 ரூபாவை மட்டுமே மீள அளிக்க முடியும் என லாப் நிறுவனம் தெரிவித்தது. ஒரு நுகர்வோர் புதிதாக லிட்ரோ சிலிண்டர் ஒன்றை வாங்குவதற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ள நிலையில், லாப் நிறுவனத்தின் இந்தத் தீர்மானம் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் அநீதியையும் நிதிப் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே, நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விநியோகப் பொறுப்பை வலியுறுத்தவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த இறுக்கமான சட்ட நடவடிக்கையை மேற்கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.