வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் துறை வெளியிட்ட முக்கிய தகவல்கள்!
Ad Space
Ad Space
வத்தளை, பள்ளியாவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
மண்டபமொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்து உபசார நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நபரொருவரை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் 'மட்டக்குளி குடு ரொஷான்' என்பவரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரொஷானின் சகோதரரின் பிள்ளையினது பிறந்தநாள் விழாவின் போது, நேற்று இரவு 9.40 மணியளவில் காரில் வந்த நபரொருவர் தலைக்கவசம் அணிந்தவாறு மண்டபத்திற்குள் சென்று குறித்த நபரை இலக்கு வைத்துத் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
எனினும், இலக்கு தவறியதால் அத்துப்பாக்கிச்சூடு ரொஷானுக்கு அருகில் நின்றிருந்த வேறொரு நபர் மீது பாய்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிஸ்டல் ரகத் துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space