வயாவிளான் மீள்குடியேற்ற அமைப்பின் ஏற்பாட்டில் வயாவிளான் மண் மீட்புக்கான கவனயீர்ப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.10.2026) முற்பகல்-10 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்.வயாவிளான் சந்தியில் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
இதேவேளை, தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பலாலிப் பகுதியில் இதுவரை மீள்குடியேற முடியாத நிலையிலுள்ள மக்கள் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை பலாலிச் சந்தியில் முன்னெடுத்து வரும் காணி மீட்புப் போராட்டம் இன்று 18 வாரமாக முன்னெடுக்கப்படவுள்ளது. பலாலி கிழக்குப் பகுதி காணி விடுவிப்பு என்னாச்சு?, கிள்ளித்தெளிச்சு ஏமாற்றாதே, எதுவரை காத்திருப்பு? அரசே பதில் சொல்! ஆகிய கோஷங்களுடன் முன்னெடுக்கப்படவுள்ள இன்றைய போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு வலுச் சேர்க்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.