அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவுத் திட்டமானது "மலையைத் தோண்டி எலியைப் பிடித்த கதையாக" அமைந்துள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்தாத வெறும் ஆவணம் மட்டுமே எனவும் மின்சார பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை (14) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் பின்வருமாறு,
மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில் சூரிய சக்தி மின் கட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளால் எவ்விதப் பயனும் இல்லை.
பேட்டரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அளவிலான வரிச் சலுகை சூரிய சக்தி உற்பத்தியாளர்களைப் பலப்படுத்தப் போதாது. ஏனைய அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், சூரிய சக்தித் துறையைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இறக்குமதி வரிகள் உட்பட அனைத்து நேரடி மற்றும் மறைமுக வரிகளும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு மிகக் குறைந்த விலையை வழங்கும் அரசாங்கம், பாரிய அளவிலான மின் உற்பத்தியாளர்களுக்கு அதிகளவிலான தொகையைச் செலுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மின் நிலையங்களுக்காக மின்சார சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க நிதி ஒதுக்கியிருப்பது அர்த்தமற்ற செயலாகும். நிலக்கரி இறக்குமதி மற்றும் பயன்பாட்டினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலாக, சூரிய சக்தி மின்சாரத்தைத் தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதற்குத் தேவையான இடங்களில் உடனடியாக பேட்டரி கட்டமைப்புகளை நிறுவினால், மின்சாரத் தடையின்றி சமநிலையைப் பேண முடியும் என அவர் வலியுறுத்தினார்.
பெற்றோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளைக் குறைப்பதன் மூலம் எரிபொருள் விலையைக் குறைக்க முடியும். போக்குவரத்துச் செலவு குறையும்போது நாட்டில் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தானாகவே குறையும் என்பதால், எரிபொருள் மீதான வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்காமல் அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதற்குக் காரணம், இந்த வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளமையாகும். அடுத்தகட்டக் கடன் தவணையைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
இறுதியாக, இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சாதாரண பொதுமக்களுக்கு நெத்தலி கருவாடும் பாண் துண்டும் சாப்பிட்டுவிட்டுத் தூங்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளதாக எம்.டி.ஆர். அதுல கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.