2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச சேவையைச் சேர்ந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று திங்கட்கிழமை (23) நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, அரச தொழிற்சங்கங்கள் ஏற்கனவே பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் இந்த எதிர்ப்புப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, நாளை நாடளாவிய ரீதியில் அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குத் தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன. இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும், சுகாதாரப் பணியாளர்களும், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் அரச ஊழியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால், நாளை முன்னெடுக்கப்படும் தேசிய எதிர்ப்புப் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி ஆசிரியர்கள், அதிபர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே தொழிற்சங்க பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
ஒன்றிணைந்த ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பிரதம செயலாளர் அமில சந்தருவன் மேலும் தெரிவிக்கையில்,
வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அரச ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆசிரியர்களும் அதிபர்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர். அரசாங்கத்தின் பதிலளிப்பைப் பொறுத்து, எதிர்வரும் வாரத்தில் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கைகள் வேலைநிறுத்தப் போராட்டமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக ஆசிரியர்கள், அதிபர்கள், ஒட்டுமொத்தக் கல்விக் கட்டமைப்பு மற்றும் அரச சேவையுடன் இணைந்து தேசிய எதிர்ப்புப் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கமைய, ஆசிரியர்களும் அதிபர்களும் கறுப்பு ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிப்பதன் ஊடாக தேசிய கறுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். இந்தப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளோம். தேசிய எதிர்ப்புப் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதாகவே நாம் அறிவித்துள்ளோம். எனினும், இதற்கு அரசாங்கம் வழங்கும் பதிலளிப்பைப் பொறுத்து, இந்த நடவடிக்கை எதிர்வரும் வாரத்தில் வேலைநிறுத்தப் போராட்டமாக விரிவடையக்கூடும்.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லாவிட்டால், விருப்பமின்றியேனும் எதிர்வரும் 30ஆம் திகதியளவில் பாடசாலைக் கட்டமைப்பை மூடவேண்டிய நிலை ஏற்படும் என்றார்.
இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கத்தின் பிரதம செயலாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்கள் உள்ளிட்ட இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தேசிய எதிர்ப்புப் ஆர்ப்பாட்டத்தில், நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் வைத்தியசாலை உதவிப் பணியாளர்கள் பங்கேற்பதற்கு ஏற்கனவே இணக்கப்பாடு தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்னால் எமது எதிர்ப்பை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தவுள்ளோம். அதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கும் சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் வைத்தியசாலை உதவிப் பணியாளர்களுடன் தொடர்புடைய அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்துள்ளோம். அரசாங்கத் தரப்பைத் தவிர ஏனைய அனைத்துத் தரப்பினரும் 30ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என்றார்.
இதற்கிடையில், அரச ஊழியர்களால் முன்னெடுக்கப்படவுள்ள தேசிய எதிர்ப்புப் ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் போராட்ட மத்திய நிலையமும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் துமிந்த நாகமுவ மேலும் தெரிவிக்கையில்,
உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கும் அவர்களது உரிமைகள் புறக்கணிக்கப்படுவதற்கும் எதிராக, எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் பல்வேறு வலுவான தொழிற்சங்க நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
இதற்கமைய, நாளை திங்கட்கிழமை (23) அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். அதேபோன்று, எதிர்வரும் 30ஆம் திகதி சில துறைகளில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும், ஏனைய சில துறைகளில் இருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டங்களில் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் நேரடியாகத் தலையிட்டு ஆதரவு வழங்கும். அரசாங்கம் இந்தத் தொழிற்சங்கக் கோரிக்கைகள் தொடர்பில் உரிய பதிலளிக்கத் தவறினால், இதனைவிடவும் விரிவான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தினரையும் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதற்குத் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் தயாராக உள்ளது என்றார்.