வழக்கு தாமதங்களுக்கு பணியாளர் வெற்றிடங்களே காரணம்: தீர்வு காண நடவடிக்கை!
Ad Space
Ad Space
நீதிமன்றங்களில் நிலவும் வழக்கு தாமதங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த நிறுவனங்களில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களே காரணமாகும். அதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்காரவுக்கும், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்றுச் சபைத் தலைவர் ரெய்ன் தம்சார் உள்ளிட்ட அந்நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் சிரேஷ்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் மாலை நீதி அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர்கள் தொடர்பான தற்போதைய சட்டங்கள், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக சிறுவர்கள் சாட்சியமளிப்பதற்கான வசதிகள், சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைச் சட்டம், சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்கு நடவடிக்கைகளின் போது, சிறுவர்களிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறு, குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் திருத்தத்திற்கு அமைய தயார் செய்யப்பட்டுள்ளதுடன், இந்தச் செயல்முறை குறித்து நீதிபதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிறுவர்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து நீதிபதிகள் பயிற்சி நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்துவதுடன், இலங்கை சட்டக் கல்லூரியின் பாடத்திட்டத்தில் சிறுவர் தொடர்பான சட்டங்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .
வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக சிறுவர்கள் சாட்சியமளிப்பதற்கான பிரத்தியேக அறை வசதிகள் தற்போது கண்டி நீதிமன்றத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன், ஏனைய நீதிமன்றங்களுக்கும் இந்த வசதிகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் வழக்கு தாமதங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதுடன், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த நிறுவனங்களில் நிலவும் பணியாளர் வெற்றிடங்களே இதற்கு முதன்மைக் காரணம் எனவும், அதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் பிரதித் தலைவர்களான சோபியா டெஸ்பாமரியம், அன்னா ஜோஹான்ஸ்டோட்டிர், அலெஜான்ட்ரா ஹெர்னாண்டஸ் கோன்சலஸ் , கிளாடியோ சில்வியோ நார்டி, நிறைவேற்று செயலகத்தின் செயலாளர் ஆண்ட்ரெஸ் பிராங்கோ மற்றும் நிறைவேற்றுச் சபைச் செயலகத்தின் பதிப்பாசிரியரும் மூலோபாய நிபுணருமான நடாலி லெஸ்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Ad Space
Ad Space