தனது வெற்றியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில்மகேஸ் 81,132 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி என்ற விஜயகுமார் 89,837 வாக்குகள் பெற்று 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் நவல்பட்டு விஜி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அன்பில் மகேஸ் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கே. குமரேஷ்பாபு முன்பாக நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தனக்கு எதிராக அன்பில் மகேஸ் தொடர்ந்த தேர்தல் வழக்கை தொடக்க நிலையிலேயே நிராகரிக்கக் கோரி நவல்பட்டு விஜி சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, தேர்தல் பிரசாரத்தின்போது குழந்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.
தவெக எம்எல்ஏ மீதான இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை விசாரணைக்கு பிறகே முடிவு செய்ய முடியும் என்று கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், அன்பில் மகேஸின் தேர்தல் வழக்கில் 4 வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு எம்எல்ஏ நவல்பட்டு விஜிக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.