“தமிழகத்தில் ஆட்டோ கட்டணம், ஆவின் பால் பொருட்கள் விலையை ஏற்றிவிட்டு பண்டிகையைக் கொண்டாடுங்கள் என்று சொன்னால் மக்கள் திண்டாடித் தான் போவார்கள்” என்று தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று (அக்.28) செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, ‘‘மக்களின் பணத்தை திமுக அரசு எப்படியெல்லாம் சுரண்டியது என்பதற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது உதாரணம். மக்கள் வரிப்பணத்தில் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுபட்டு விடக்கூடாது என்பது பாஜகவின் அழுத்தமான கருத்து.

தமிழ்நாட்டில் குழந்தை காணாமல் போவது அதிகரித்துள்ளது. முதல்வரை ‘மாமா’ என அன்போடு அழைத்த குழந்தைகள் இன்று காணாமல் போய்கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பெண் படை என்ன செய்கிறது? எங்கே போனது? வருங்கால சிங்கப் பெண்களை  கூட சிங்கப்பெண் படையால் காக்க முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வரின் திரைப்படத்தில்தான் த்ரில் காட்சிகள் வரும் என கேள்விப்பட்டுள்ளோம். சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியது ஏதோ திட்டமிட்ட சதியாகத் தெரிகிறது.

அதேபோல், மின் கட்டணம் உயர்ந்து முறையற்ற கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின்துறை அமைச்சர் மின்சாரக் கொள்முதல் விலை குறித்து மாறி மாறிப் பேசி வருகிறார். வாங்குவதாக கூறப்படும் மின்சாரத்தைக் கைவிடுவதாக கூறுகிறார். ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை கைவிடாமல் இருந்தால் நல்லது.

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் இருண்ட காலம் என்று மாணிக்கம் தாக்கூர் சொல்கிறார். கர்நாடகாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெற்று தரும் கடமையை முதலில் காங்கிரஸ் ஆற்ற வேண்டும். தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத்தந்து விட்டு பிறகு பேச வேண்டும். 

ஹார்மூஸ் நீரிணை மூடப்பட்ட போது பல நாடுகள் கேஸ், பெட்ரோல் இன்றி தவித்தன. ஆனால், 41 நாடுகளிடம் இருந்து பெட்ரோல், டீசலை வாங்கியதுடன் உலகிலேயே கேஸ் பிரச்சினை இல்லாத ஒரே நாடாக இந்தியா இருந்தது. அப்படி என்றால் பிரதமர் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார் என்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் உயர்வது மட்டுமின்றி தனியார் பேருந்து உரிமையாளர்கள் 50 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தீபாவளி நெருங்கும் சமயத்தில் அரசு நியாய விலைக்கடை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்கள். ஆவின் பால் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இவற்றை எல்லாம் தீபாவளிக்குள் குறைக்க வேண்டும். விலையை ஏற்றி விட்டு தீபாவளி கொண்டாடுங்கள் என்று சொன்னால் அது திண்டாட்டமாக போய்விடும்.

தமிழகத்தில் முதல்வர் வெற்றி பெற்றதால் அதைத் தொடர்ந்து திரையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்க உரிமை உள்ளது. ஆனால் திரைத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிப்போம் என்பது தவறு.

அதேபோல அரசியலுக்கு யார் வந்தாலும் பாஜக இயக்குகிறது எனக் கூறுகிறார்கள். லட்சுமி, சரஸ்வதி கூட தாமரையில் தான் அமர்ந்துள்ளார்கள். அவர்களை பாஜக என சொல்ல முடியுமா கரப்பான் பூச்சி தேய்ந்து கட்டெறும்பாக மாறிவிட்டது. அதுவும் தேய்ந்து கொசுவாக மாறும். ‘வி த லீடர்ஸ்’ உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை’’ என்றார்.